வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இரு ஆசிரியைகள் மற்றும் ஒரு சிறுவன் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் வசித்து வந்த இந்தி ஆசிரியை முஸ்கான் (28), அவரது மகன் புர்கான் (9) மற்றும் சமூக அறிவியல் ஆசிரியை சுதாராணி (40) ஆகிய மூவரும் புதன்கிழமை பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேப்பனப்பள்ளி - கிருஷ்ணகிரி சாலையில் எகுடதம்பள்ளி அருகே சென்றபோது, கர்நாடகாவிலிருந்து கல் பாரம் ஏற்றி வந்த லாரி மோதி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் வெங்கட்ராமனை (55) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.